தீபாவளி என்றாலே விதவிதமான வெடிபொருட்கள் புத்தாடைகள், பரிசுப்பொருட்கள், பட்டாசு, இனிப்புகள் புத்தாடை என விமரிசையாக கொண்டாடப்படும். தீபாவளி பரிசுப் பொருட்களுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகளை மட்டும் தான் இதுவரை நாம் பார்த்திருப்போம்.
ஆனால், சென்னையில் ஒருவர் குடிமகன்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் கண்டுபிடிக்கிற களத்தில் குதித்துள்ளார். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் 200 ரூபாய் வீதம், 10 மாதங்கள் பணத்தை கட்டினால் 700 ரூபாய் மதிப்புள்ள புல் பிராண்டி, கூலிங் பீர் 3, ஒயின் 1/2, ஓட்கா 1/4, விஸ்கி 1/4, ரம் 1/4, வாட்டர் 1லிட்டர் 4, கோக் அல்லது பெப்சி 2 லிட்டர், 3 சோடா, உருளைக்கிழங்கு சிப்ஸ் சால்ட் 1 பாக்கெட், உருளைக்கிழங்கு சிப்ஸ் காரம் 1 பாக்கெட், ஸ்வீட் 1/2 கிலோ, ஊறுகாய் 1/4:கிலோ, சிக்கன் பக்கோடா 1/2 கிலோ ஆகியவை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கான விதிமுறைகளையும் அறிவித்துள்ளார். அதில்,
1.மாதம் 200 ரூபாய் வீதம் பத்து மாதம் கட்ட வேண்டும்.
2.தொடர்ந்து 2 மாதம் பணம் கட்ட தவறினால் திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். கட்டிய பணம் இடையில் திரும்ப பெற இயலாது. திட்டம் முடிவில் வழங்கப்படும்.
3.ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி முதல் 10-ம் தேதிக்குள் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாளில் பணம் செலுத்தவில்லை என்றால் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 20 வீதம் சேர்த்து கட்ட வேண்டும்.
4.பொருட்கள் வழங்கும் போது அட்டையை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இதற்கான விளம்பரத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் உரிமையாளர் சுரேஷ்குமார். தற்போது, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.