வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
குறிப்பாக, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்களில் கனமழை பெய்ததால் அப்பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்திருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் 3வது நாளாக இன்றும் நேரில் சந்தித்து ஆய்வு செய்து வருகிறார். அதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களையும் அவர் வழங்கினார்.
காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை அவர் ஓயாமல் களத்தில் இறங்கி, வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் ஆய்வு செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து திமுகவினரும், முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசி வருகின்றனர்.
இப்படியிருக்கையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தது போன்ற ஒரு புகைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்தது பெரும் சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவ இளங்கோ சாலை, பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பில், கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்ததாக புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
அந்தப் புகைப்படமானது கிராஃபிக்ஸ் செய்யப்பட்டிருந்ததால், எதிர்கட்சியினர் அதனைப் பகிர்ந்து கடுமையாக விமர்சனம் செய்தனர். அதாவது, திமுக நாடக கம்பெனி பழக்க தோஷத்தில் கமிஷன் வாங்கிட்டு கிராபிக்ஸ் போட்டதால் வந்த விளைவு எனக் குறிப்பிட்டு, அந்தப் புகைப்படத்தை பாஜக பிரமுகர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.
இதேபோல, பலரும் இந்தப் பதிவை பகிர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தனர். இதைத் தொடர்ந்து, அந்தப் பதிவு உடனே நீக்கப்பட்டு, பின்னர் வேறு புகைப்படத்துடன் மீண்டும் பதிவிடப்பட்டது. இருப்பினும், அதனை ஸ்கீரின்ஷாட் எடுத்து, திமுகவினரின் இந்த செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற விஷயங்களில் கிராஃபிக்ஸ், எஃபெக்ட்ஸ் எல்லாம் போட்டு அட்டகாசமான விளம்பரம் தேடும் திமுக, மக்கள் பணிகளில் கொஞ்சம் கிராஃபிக்ஸை குறைத்திருக்கலாம் என்றும் கமெண்ட்டுக்கள் பலமாக வந்து கொண்டிருக்கின்றன.