ஒரு வாரத்தில் இரண்டு கோடியா!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மருத்துவத்துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது.
அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. பின்னர் அதன் தொடர்ச்சியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மே ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி மிக மந்தமாகவே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தை உணர்ந்த மக்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை விரிவுபடுத்தும் வகையில் நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. மேலும் 15 வயது முதல் 18 வயது உடைய சிறுவர், சிறுமிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து 15 வயது முதல் 18 வயது உடைய சிறுவர், சிறுமிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்த தொடங்கிய ஒரு வாரத்திற்குள் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.