புதிதாக 13 மாவட்டங்கள்! வெளியான அறிவிப்பு!!
ஆந்திராவில் பொதுமக்களின் நலன் கருதி தற்போது இருக்கும் 13 மாவட்டங்களை இரண்டாக பிரித்து, புதிதாக 13 மாவட்டங்கள் என மொத்தம் 26 மாவட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில், ஒரு மாவட்டத்துக்கு ஒரு ஏர்போர்ட் கொண்டு வர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கான பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளார். இந்நிலையில் ஆந்திராவில் தற்போது சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் மற்றும் விசாகப்பட்டினம் என மொத்தம் 13 மாவட்டங்கள் உள்ளன.
இந்த 13 மாவட்டங்களும் அதிக பரப்பளவு கொண்டவையாக இருப்பதால் அதன் மாவட்ட தலைநகரங்கள் அதிக தூரத்தில் இருகின்றன. இதனால் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிப்பதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் மாவட்டங்களை இரண்டாக பிரிக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
எனவே இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் 13 மாவட்டங்களை பிரிக்கும் பணிகள் முடிவடைந்ததால் மாவட்டங்கள் பிரிப்பதற்கான வரைபடங்களை நேற்று முன்தினம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.
அதன்படி ஏற்கனவே உள்ள 13 மாவட்டங்களை இரண்டாக பிரித்து புதிதாக 13 மாவட்டங்கள் என மொத்தம் 26 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது உள்ள சித்தூர் மாவட்டம் சித்தூர், திருப்பதி என இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தூர் மாவட்டத்திற்கு சித்தூர் தலைநகரமாகவும், திருப்பதியை தலைமையிடமாக கொண்டு பாலாஜி மாவட்டம் புதிதாக உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் மற்ற மாவட்டங்களும் பிரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.