ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர்.
இதனால் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதற்கு அந்த மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். நிலைமையை உணர்ந்த அம்மாநில அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்துதான் வர வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனிடையே, கல்லூரி நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசின் இந்த ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து, அதற்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில், இஸ்லாமிய மாணவிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை முதலில் தனி நீதிபதி விசாரித்து வந்த நிலையில், பின்னர் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், உச்சநீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.