தோனியை இயக்கிய தருணம் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அதன் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த தோனி, சென்னையில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் தங்கியுள்ள தோனியை சந்தித்த விக்னேஷ் சிவன் அவருடன் சேர்ந்து எடுத்துகொண்ட புகைபடத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து விரைவில் தோனியை நான் இயக்கப்போகிறேன் என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து தமிழ் மொழி படத்தில் தோனி நடிக்க உள்ளாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. இந்த நிலையில், விக்னேஷ் சிவன், தோனியை வைத்து விளம்பரம் ஒன்றை இயக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக விக்னேஷ் சிவன் தனது சமூக வளைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில்,
நீண்ட நாட்களாக அவரை பார்க்க வேண்டும் என்கிற கனவு தற்போது நிறைவேறி உள்ளது. என்னுடைய அம்மா காவல்துறை அதிகாரி என்பதால் ஐபிஎல் போட்டி நடைபெறும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது என் அம்மா தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
அன்றிலிருந்து எப்படியாவது தோனியை சந்தித்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் ஆசையாக மாறிவிட்டது. தோனி என் ரோல் மாடல். அவரை நான் எப்போதும் பின்பற்றுவேன் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
மேலும், தோனி எளிமையான மனிதரை போல் நடந்து கொண்டார். அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் என்னுடைய வாழ்வின் சிறப்பான தருணங்களாக இருந்தது. என் நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறியது என பதிவிட்டுள்ளார்.