ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை!
கர்நாடகத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி ஒன்றில் அங்கு பயிலும் மாணவர்களுக்கு சீருடை கட்டுப்பாட்டை கொண்டுவந்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பெரும் பிரச்சனையானதை தொடர்ந்து கர்நாடக அரசும் மாணவர்கள் கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த ஆடைகளை அணிய தடை விதித்தது. இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் இந்த ஆடை கட்டுபாட்டுக்கு தடை விதித்து உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், “கல்வி நிலையங்களில் மாணவர்கள் மதம் சார்ந்த ஆடைகளை அணிய விதிக்கப்பட்ட தடை தொடரும் எனக் கூறி கர்நாடக அரசு விதித்த உத்தரவை உறுதி செய்து ஹிஜாப் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.”
இந்த தீர்ப்புக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வகையில் அன்றைய நாளில் தேர்வு எழுத சென்ற பல இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அறிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்வு எழுதாமல் தேர்வு கூடத்தை விட்டு வெளியேறி சென்றனர். அதனை தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அன்றைய தினமே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையிடப்பட்டது. ஆனால், ஹோலி பண்டிகைக்கு பிறகு இந்த வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து இந்த ஹிஜாப் தொடர்பான வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தீர்ப்பு தொடர்பாக பல்வேறு அமைப்புகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தை விமர்சிப்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இது நீதிமன்றத்தின் மரியாதையை குறைக்கிறது. இதனால் அவர்கள் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.