பிரேக் பிடிக்காத பஸ்!! வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவர் பணியிடை நீக்கம்!! 

Photo of author

By Amutha

பிரேக் பிடிக்காத பஸ்!! வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவர் பணியிடை நீக்கம்!! 

அரசு பஸ்ஸை பிரேக் பழுதானதால் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி  மாவட்டத்தில் உள்ள மேலசங்கரன்குழியை சேர்ந்தவர் ஞான பெர்க்மான்ஸ் (வயது 47),. இவர் நாகா்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்  நேற்று முன்தினம் இவர் வடசேரியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 18 பயணிகள் இருந்தனர். ஆனால் அவர் ஓட்டிச் சென்ற பஸ் மிகவும் பழுதான பஸ் என்று கூறப்படுகிறது. அதேபோல பஸ்சில் சரிவர பிரேக் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் பஸ்சை இயக்கும் போது வலது புறமாக இழுத்துக் கொண்டு சென்றுள்ளது.

இதன் காரணமாக டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் பயணிகளின் நலன்கருதி தொடர்ந்து பஸ்ஸை இயக்காமல்  நடுவழியில் நிறுத்தி விட்டு பயணிகளுக்கு வேறு ஒரு மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார்.  தொடர்ந்து பழுதான அரசு பஸ்சை சரி செய்வதற்காக வள்ளியூரில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பஸ் ஓரளவுக்கு சரி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பஸ்ஸை இயக்கிய போதும் சரிவர இயங்கவில்லை. இதனால் கடும் விரக்தி அடைந்த டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் பஸ்சை பணிமனைக்கு கொண்டு செல்லாமல், நேராக விசுவாசபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கிருந்த வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் பஸ்சை ஒப்படைத்து விட்டு நடந்த சம்பவங்களை மனுவாக எழுதி கொடுத்துள்ளார்.இதைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பஸ்சை சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் உள்ள பிரேக் சரிவர வேலை செய்யாதது தெரியவந்தது.

இதையடுத்து அரசு பஸ்சை டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் திடீரென பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை அதிகாரிகளின் பேச்சை கேட்காமல் பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்ததால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.