ஒரு சின்ன சந்தேகத்தில் போன உயிர்! வாலிபரை கொன்றுவிட்டு தேடுவது போல நடித்த தொழிலாளி கைது!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற ஐயத்தில் வாலிபரை தொழிலாளி ஏரியில் தள்ளி கொன்றுள்ளார்.
சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் விஜயகாந்த் வயது 37. இவர் கட்டிட தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுடன் ராஜீவ் காந்தி வயது 32, என்பவரும் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகிறார். தர்மபுரியை சேர்ந்த இவர் ரேணுகாவின் உறவினராவார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் அவரது ஊரில் வேலை இல்லாமல் சுற்றி வந்த ராஜீவ் காந்தி சென்னை வந்து ரேணுகாவின் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி வழக்கம் போல வேலைக்குச் சென்ற ராஜீவ் காந்தி வீடு திரும்பவில்லை. இதனால் ரேணுகா மற்றும் அவரது கணவர் விஜயகாந்த் பல்வேறு இடங்களில் ராஜீவ் காந்தியை தேடி வந்தனர். இதையடுத்து பெருங்குடி ஏரியில் ராஜீவ் காந்தி இறந்து போன நிலையில் கிடப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு வந்து ராஜீவ் காந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
அடுத்து வெளிவந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தில் காயம் இருப்பதாக வந்ததையடுத்து போலீசார் ரேணுகா மற்றும் அவரின் கணவர் விஜயகாந்த் இருவரிடமும் விசாரணை செய்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
திருமணமாகி வேலை இல்லாமல் ஊரில் சுற்றி வந்த ராஜீவ் காந்தியை, விஜயகாந்த் தான் சென்னை அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். ஆரம்பத்தில் கட்டுமான தொழிலுக்கு சென்று வந்த ராஜீவ் காந்தி பின்னர் குடித்துவிட்டு ஊர் சுற்ற தொடங்கினார். மேலும் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு இருக்குமோ? என விஜயகாந்திற்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. இதன் காரணமாக விஜயகாந்திற்கும், ராஜீவ் காந்திக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகளும் வாக்குவாதமும் ஏற்படத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி ராஜீவ் காந்தி,, விஜயகாந்த் இருவரும் பெருங்குடி எரிப்பகுதிக்கு சென்று ஒன்றாக மது அருந்தத் தொடங்கினர். அப்போது தனது மனைவியுடனான கள்ளத் தொடர்பு பற்றி ராஜீவ் காந்தியிடம் கேட்டு விஜயகாந்த் சண்டை போட்டுள்ளார். தகராறு முற்றவே வைத்திருந்த கத்தியால் விஜயகாந்த் , ராஜீவ் காந்தியை கழுத்தில் குத்தியுள்ளார். பின்னர் ஏரியில் தள்ளிவிட்டு, சென்றுள்ளார். பின்னர் ராஜீவ் காந்தியை காணமல் தேடும் போது மற்றவர்களுடன் சேர்ந்து அவரும் தேடியுள்ளார். இவ்வாறு விஜயகாந்த் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றிய போலீசார் விஜயகாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளத்தொடர்பு என நினைத்த ஒரு கொடுமைக்கு அநியாயமாக ஒரு உயிர் பலியாகியுள்ளது.