மனைவி 2வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனது ஒன்றரை வயது குழந்தையுடன் காவிரி ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சோகம் நாமக்கலில் நடந்துள்ளது.
நாமக்கலை சேர்ந்த ரமேஷ் 10 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னதாக திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ரமேஷிற்கு விபத்து ஏற்பட தண்டுவடத்தில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் எந்த வித வேலையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ரமேஷ் வலியாலும் துடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, குடும்பத்தையும் பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் ரமேஷ் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
தன்னால் ஒன்றும் செய்ய இயலாத நிலையை எண்ணி வருந்திய ரமேஷ் தனது மனைவியின் மீது கொண்ட அக்கறை மற்றும் காதலால் அவரை 2வது திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளார். கணவன் மீது கொண்ட காதலில் 2வது திருமணத்திற்கு மனைவி மறுத்து வரவே, என்றைக்காது ஒருநாள் தற்கொலை செய்து கொள்வேன் என ரமேஷ் கூறி வந்துள்ளார். இதுமட்டுமின்றி தனது மனைவி 2வது திருமணத்திற்கு தடையாக குழந்தை இருப்பதாகவும் ரமேஷ் எண்ணியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் ஒன்றரை வயது குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற ரமேஷ் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. பதற்றமடைந்த திவ்யா அவரை தேடி அலைய, ரமேஷ் சென்ற இருசக்கர வாகனம் காவிரி ஆறு செல்லும் பாலத்தின் மீது இருந்தது கண்டறியபட்டது. ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்திய நிலையில் பரிசல் படகுகளில் சென்று குழந்தை மற்றும் ரமேஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தனது உடல் செயலிழந்த நிலையில் தனது மனைவியின் எதிர்காலத்திற்காக அவர் 2வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தானும், குழந்தையும் தடையாய் இருக்க கூடாது என எண்ணிய ரமேஷ் குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு காண்போரை கண்கலங்கச்செய்தது.