கத்திப்பாராவில் அரசு பஸ் மோதியதில் மகன் கண் முன் தாய் உயிரிழப்பு
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் மேட்டுக் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா(42). இவர் உடல் நலக் குறைவு காரணமாக கே.கே. நகரில் உள்ள மருத்துவமனைக்கு தனது மகன் பார்த்திபன் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ஆலந்தூர் ஆசர்கானா அருகே வளைவு பகுதியில் திரும்பும் போது கோவையில் இருந்து வந்த அரசு விரைவு பஸ் மோதியது. இதில் நிலை தடுமாறி பார்த்திபன், அவரது தாய் ஜெயா ஆகியோர் விழுந்தனர்.
அப்போது பார்த்திபன் கண்முன் தாய் ஜெயா பஸ்சின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே ஆத்திரமடைந்த வாகன ஒட்டிகள் கற்களை வீசினார்.
இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.