சமூக வலைத்தளங்களில் புது விவாதத்தை உண்டாக்கி இருக்கும் விஷயமாக எல். முருகன் ராஜினாமா விஷயம் மாறி இருக்கிறது. ஒரு புறம் எல். முருகனைக் கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்து அவரது பதவியைப் பறித்து இருக்கிறது என்று ஒரு புறமும், மறுபுறம் இல்லை, 2029 நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு அவரைக் கட்சியை வலுப்படுத்த அனுப்பி இருக்கிறது என ஒரு புறமும் பதில் கொடுக்கப்படுகிறது.
இந்தச் சூழலில்தான் என்ன நடந்தது இந்த விஷயத்தில் என ஒரு தெளிவை பாஜகவினர் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், பாஜகவின் வியூகம் ஒன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கிறது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் பெரும்பான்மை பெறாத நிலையில், எங்கெல்லாம் கட்சியை வலுப்படுத்த வேண்டும், மேலும் எங்கு கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று கணக்குகள் போடப்பட்டு இருக்கின்றன.
கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்றாக மூன்றாவது கட்சியாக பாஜக வளர்ந்து வருகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் வெற்றி பெற்றார். அங்கு குறைந்தது 5 சீட்டுகள் வரை வெல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறதாம். கேரளாவில் வலுவான கூட்டணி அமைக்க முடியாத இடத்தில் பாஜக இருக்கிறது. எனவே, தனித்துத்தான் அங்கு நிரூபிக்க வேண்டிய சூழல் இருக்கிறது.
தமிழகத்தில் இப்போது அரசியல் சூழலே மாறி இருக்கிறது. த வெ க வெற்றி பெற்ற பின்பு திமுக தனித்து விடப்பட்டு இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதானப் போட்டியாக த வெ க, திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் இடையில்தான் இருக்கப்போகிறது. எனவே, இந்த முறை குறைந்தது பாஜக கூட்டணி 15 இடங்களை வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
அண்ணாமலை பாஜகவில் இருந்தபோது அவரை மையமாகக் கொண்டு கட்சியை முன்னெடுத்த நிலையில், தற்போது அவர் புதிய இயக்கம் தொடங்கி வெளியேறி இருப்பதால், தமிழகத்தில் பாஜகவை மேலும் வலிமையாக நடத்தவும், கூட்டணிகளை முன்பே ஒருங்கிணைக்கவும் கூட்டுத் தலைமைத் திட்டம் தேவைப்படுகிறது என டெல்லி பாஜக தலைமை கருதுகிறது.
அதன் அடிப்படையில்தான் எல். முருகன் தமிழக அரசியல் களத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கிறாராம். எல். முருகன் கட்சிப் பணிக்குத் திரும்புவது குறித்து செப்டம்பர் மாதமே முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும், சென்னையில் மெட்ரோ திறப்பு விழா திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்க மாநிலத்திற்கு வருகை தர இருந்ததும், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க இருந்ததால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து ராஜினாமாவைத் தள்ளிப்போட்டு இருந்தார்களாம். பிரதமர் தமிழகம் வந்து திட்டங்களைத் தொடங்கி வைத்த பின்பு எல். முருகன் கட்சிப் பணிக்குத் திரும்பி இருக்கிறார்.
மத்திய பாஜகவைப் பொறுத்தவரை வெளிநாட்டு சக்திகளின் அழுத்தத்தைக்கூடத் திறம்படக் கண்டறிந்து தடுக்கும் சக்தி படைத்த உளவுத்துறையைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக, மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டே வருவார்கள். அவர்கள் பக்கத்தில் சிறு தவறு நடந்தாலும் பிரதமர் அலுவலகத்திற்கு ரிப்போர்ட் சென்றுவிடும். எனவே, தவறு என்பது இயலாத காரியம். மேலும், ஒருவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டால் பாஜக எங்குமே வாழ்த்தாது. ஆனால், எல். முருகனின் ராஜினாமா கடிதத்தை இந்தியில் பகிர்ந்த பாஜக அவரை வாழ்த்தி இருக்கிறது.
அதில்: “பதவியை விடக் கடமை பெரியது; அதிகாரத்தை விடச் சேவை உயர்ந்தது!”
அரசியலில் பலரும் பதவிகளையும் அதிகாரத்தையும் தேடி ஓடுகிறார்கள். ஆனால், உண்மையான தொண்டனின் மனநிலை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகி, தமிழகத்தில் அடிமட்ட அளவில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன் டாக்டர் எல். முருகன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் அளவுக்கு உயர்ந்த டாக்டர் முருகனின் இந்த நடவடிக்கை, அவரைப் பொறுத்தவரை பதவியை விடக் கட்சியின் வளர்ச்சியும், மக்கள் சேவையுமே முதன்மையானவை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
கட்சித் தொண்டர்களுடன் இணைந்து செயல்படுவதும், கட்சி அமைப்பை வலுப்படுத்துவதுமே அவரது முன்னுரிமையாக உள்ளது.
இதுதான் பாஜகவின் தொண்டர் கலாசாரம்!
“தேசம் முதலில்; கட்சி அடுத்து; தனிநபர் கடைசியில்!” எனக் குறிப்பிட்டு இருக்கிறது தேசிய பாஜக. இதன் மூலம் எல். முருகனுக்குக் கொடுக்கப்பட்டது ப்ரோமோஷனா அல்லது டீ ப்ரோமோஷனா என்பது தெளிவாகத் தெரியவந்து இருக்கிறது.
எல். முருகனைச் சந்திக்க அவரது கோயம்பேடு இல்லத்தில் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தினமும் கூடிவருவதிலிருந்தே, அது சொல்லும் மையச் செய்தி என்ன என்பது கேள்வி எழுப்பிய பலருக்கும் புரியத் தொடங்கி இருக்கிறது.