நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர்..!!
வழக்கமாக நடிகர் விஜய்யின் புதிய படம் வெளியாகும் சமயத்தில் அவர் மீது தான் புகார்கள் எழும். சமீபத்தில் கூட கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில், இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் என்று கூறி விஜய் மீது சிலர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது விஜய்யை தொடர்ந்து நடிகர் விக்ரம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் சித்தா பட இயக்குனர் அருண்குமாருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில், விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. வீர தீர சூரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், அதே நாளில் படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருந்தது.
அதில் விக்ரம் இரண்டு கைகளிலும் அரிவாளை பிடித்தது போல நின்று கொண்டிருப்பார். இந்நிலையில் இவை அனைத்தையும் சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் நடிகர் விக்ரம் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “வீர தீர சூரன் படத்தின் போஸ்டர்களில் நடிகர் விக்ரம் ஆயுதம் ஏந்தி காட்சி அளிக்கிறார்.
இதன் மூலம் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு ஹீரோ இளைஞர்கள் மனதில் தவறான எண்ணத்தை விதைக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியுள்ளார். இப்படி படங்களில் இருக்கும் ஒவ்வொரு காட்சிக்கும் வழக்கு தொடர்ந்தால் படமே எடுக்க முடியாது. அது வெறும் படம் அதை படமாக மட்டும் பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லை என பலரும் கூறி வருகிறார்கள்.