சப்பாத்தி ஆர்டர் செய்து வெகு நேரம் காத்திருந்த வாடிக்கையாளர் ஆத்திரத்தில் மேஜையை உடைத்ததினால், ஹோட்டல் ஊழியர்கள் அவரை தாக்கியதில் மண்டை உடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது மனைவி கவிதாவுடன் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்று சப்பாத்தி ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்து வெகுநேரமாகியும் சப்பாத்தி வராததினால் ஆத்திரமடைந்த சுரேஷ், உணவகத்தில் இருந்த மேஜையை அங்கேயே உடைத்துள்ளார்.
இதனைக் கண்ட உணவக ஊழியர்கள் சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சப்பாத்தியை சுட்டு தான் தர முடியும்,அப்படியேவா தர இயலும் என்று கேட்டுள்ளனர். சாப்பாத்தி செய்ய சிறிது நேரம் ஆகும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் சுரேஷ் என்பவருக்கு வெகுநேரம் காலதாமதமானதால் காரணமாகவே மேஜையை உடைத்தேன் என்று கூறியுள்ளார்.
இதனால் சுரேஷ் என்பவருக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. இதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த உணவக ஊழியர்கள், சுரேசை கடுமையாக தாக்கியதன் காரணமாக சுரேஷ் என்பவருக்கு தலையில் பலமாக அடிப்பட்டு ரத்தம் வெளியேறியது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்திலிருந்த நபர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.