ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாடுபவர்கள் எண்ணிக்கை நாட்டில் பெருகிக்கொண்டு வருகிறது, இதனால் பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகின்றது. ஆன்லைன் ரம்மி என்றாலே பலரும் பயப்படும் அளவிற்கு இதன் விளைவு உள்ளது. இந்த விளையாட்டினால் பணத்தை இழந்து பல கணவன்மார்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்துகொண்டுள்ளனர். முன்னர் ப்ளூவேல் என்கிற கேம் மக்களை அச்சுறுத்தி வந்தது, அந்த கேமை தடை செய்தது போல இந்த ரம்மி விளையாட்டையும் தடை செய்யக்கோரி நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை வைத்து வந்திருந்தனர்.
இந்த ஆன்லைன் ரம்மி கேம் விளம்பரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருக்கிறார், இதனால் இவரை சமுக வலைத்தளங்களில் பலரும் திட்டி தீர்த்தும், ட்ரோல் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் சென்னை எழும்பூரில் நடிகரும் இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்தவர் ரம்மி ஒரு அறிவுப்பூர்வமான விளையாட்டு, அதற்கான அறிவு இருந்தால் மட்டும் தான் ரம்மி விளையாட முடியும். இவ்வளவு ஏன் கிரிக்கெட் கூட ஒரு சூதாட்டம் தான், இங்கு எல்லாமே சூதாட்டம் தான். மக்கள் குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதிக்க விரும்புகின்றனர் அதனால் இதுபோன்ற சூதாட்டங்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறினார்.
மேலும் பேசியவர் நான் சொன்னதால் தான் மக்கள் ரம்மி விளையாடுகிறார்களா ? நானும் ஒட்டு போடுங்கள் என்று கேட்கிறேன் ஆனால் யாரும் ஒட்டு போடுவதில்லை, அப்புறம் எப்படி ரம்மி மட்டும் விளையாடுவார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களையெல்லாம் ரம்மி விளையாண்டு இறந்தவர்களாக சொல்லாதீர்கள். ரம்மியை தடை பண்ணுவதற்கு முன்னரிலிருந்தே நான் விளம்பரத்தில் நடிக்கிறேன், இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டியது அரசின் வேலை என்று ஆவேசமாக பேசியுள்ளார்.