பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!
பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடும் விதமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருப்பவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இருக்க தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 13 ஆம் தேதிமுதல் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.அதனால் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்பினார்கள் அதனால் கூடுதலாக ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது.
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வால் அரசு பேருந்துகளின் இருக்கைகள் முதலில் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இன்று கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கும்பகோணம், தேனி,ஓசூர்,தர்மபுரி,பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு தின்தோறும் இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 1187 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3287 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று மாலையில் இருந்து இரவு வரை சிறப்பு பேருந்துகள் சென்னைக்கு புறப்பட்டு வருகிறது.