தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக என இரண்டும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்காக வியூகங்களை வகுத்து வருகின்றன. தற்போது ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவில் அடுத்து யார் முதல்வர் என்ற போட்டி பூதாகரமாக கிளம்பியுள்ளது.
தற்போது கிளம்பிய இந்த பிரச்சனையை தற்காலிகமாக சமாளிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என இருவரும் இணைந்து சமரச அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட போட்டியானது ஓய்ந்தபாடில்லை.
அதேபோல திமுகவிற்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக பெரும் தலைவலியை கொடுத்து வருகிறது. குறிப்பாக திமுகவில் அதிருப்தியில் உள்ள ஒவ்வொருவரையும் பாஜக தரப்பு அணுகி தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர்.
மறுபக்கம் திமுகவோ, தமிழகம் முழுவதும், அதிமுகவில் முக்கியத்துவத்தை இழந்து, அதிருப்தியில் இருக்கும் பன்னீர் ஆதரவாளர்களை குறிவைத்து வலைவீசி வருகிறது.குறிப்பாக வட தமிழகத்தில் செல்வாக்குடன் விளங்கும் திமுகவிற்கு சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு பேரிடியாக அமைந்தது.இதனையடுத்து இப்பகுதியில் மீண்டும் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் திமுக தரப்பு இறங்கியுள்ளது.
அதன் முதல் கட்டமாக, விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராகவும், எம்.பி யாகவும் இருந்த டாக்டர் லக்ஷ்மணனை, இழுக்க ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டன என்றும் சொல்லப்படுகிறது.
அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட செயலாளராக, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட டாக்டர் லக்ஷ்மணன், அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு பெரும் தலைவலியாக இருந்தார். மேலும், சண்முகத்திற்கு மாவட்டத்தில் இருந்த செல்வாக்கையும் குறைத்து விட்டார்.
ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், டாக்டர் லக்ஷ்மணன், தர்மயுத்தம் நடத்திய பன்னீருடன் அணிவகுத்தது, அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வசதியாக போய்விட்டது. அவர் லக்ஷ்மணனின் அரசியல் பலத்தை முற்றிலுமாக ஒழித்து, தம்முடைய செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டார்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, புதிய மாவட்டத்திற்கு லக்ஷ்மணனை பொறுப்பாளராக நியமிக்கவும், சி.வி.சண்முகம் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தோன்றியதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.
அதனால், அதிருப்தியில் இருந்த லக்ஷ்மணனை, திமுகவினர் கிட்டத்தட்ட வளைத்து விட்டதாகவே செய்திகள் கூறுகின்றன. வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் விழுப்புரம் மாவட்டத்தில், சி.வி.சண்முகத்தை எதிர்த்து அரசியல் செய்ய, லக்ஷ்மணனே சரியான தேர்வாக இருக்கும் என்று திமுக கருதுகிறது.
ஆயினும், இந்த நகர்வு பொன்முடிக்கு தெரிந்தால், அதற்கு அவர் முட்டுக்கட்டையாக இருப்பார் என்று நினைத்த, திமுக தலைமை, அவருக்கு தெரியாமலே இந்த வேலையை செய்துள்ளது.
மறுபக்கம், முதல்வர் எடப்பாடி தரப்பு, லக்ஷ்மணனை தக்கவைத்துக் கொள்ள, எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. ஏனென்றால், அமைச்சர் சி.வி.சண்முகத்தை மீறி, விழுப்புரம் மாவட்டத்தில் எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே அதிமுக தலைமை உள்ளது.
இதேபோல், தமிழகம் முழுவதும் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் பன்னீர் ஆதரவாளர்களை, ஸ்கெட்ச் போட்டு தூக்குவதற்கான வேலைகள், திமுகவில் ஜரூராக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு, அதிமுக தரப்பு எப்படி பதிலடி கொடுக்கப் போகிறது என்பது, அடுத்தடுத்து தெரியவரும்.
–ராஜேந்திரன்