மாநகராட்சியின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தம்பதி அய்யனார், சோனியா. இவர்களின் மகன் ரக்சன். இச்சிறுவனுக்கு வயது 4,
சிறுவன் ரக்சன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து அவனது பெற்றோர் அருகில் உள்ள கிளினிக்-க்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சிறுவன் ரக்ஷன் அனுமதிக்கப்பட்டான். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிறுவன் ரக்சன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுவன் உயிரிழந்த செய்தி அறிந்த சிறுவனின் பெற்றோரும், உறவினர்களும் அரசு மருத்துவமனையை அலட்சியத்தால் தான் குழந்தை உயிரிழந்த்தாக குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். காவல்துறையினர் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேசி சமாதானப்படுத்தினர்.
சிறுவன் ரக்சன் உயிரிழந்த செய்தி அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில், சிறுவன் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் செய்திகள் வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேட்டை சரி செய்யாத இந்த விடியா திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்றும் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.
சிறுவன் ரக்சன் பெற்றோர், எங்கள் பகுதி போதிய குடிநீர் வசதி இல்லை என்றும் மாநகராட்சியால் வழங்கப்படும் குடிநீரும் அசுத்தமாக விநியோகம் செய்யப்படுவதாகவும் எங்கள் இருப்பிடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் இதனை சீர் செய்ய சென்னை மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது, குறிப்பிடத்தக்கது.