வாழை நாரில் டைல்ஸ் செய்து அசத்தும் பொறியியல் மாணவர்கள்..!!
மரங்களிலேயே வாழை மரம் மட்டும் தான் முழுமையாக மனிதர்களுக்குஅ பயன்படுகிறது. வாழை மரத்தின் இலை, பூ, காய், பழம், அதன் தண்டு மற்றும் நார் என வாழை மரத்தை பொறுத்தவரை அனைத்துமே நமக்கு பயன்படக்கூடியவை தான். இதனால் பெரும்பாலும் அனைவரின் வீடுகளிலும் வாழை மரத்தை பார்க்க முடியும். அது மட்டுமல்ல இதன் தண்டு மற்றும் பூ மருத்துவ குணங்கள் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வாழை நாரில் இருந்து நிறைய கைவினை பொருட்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக வாழை நாரில் இருந்து அழகிய புடவைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். புடவை மட்டுமின்றி டேபிள் மேட், யோகா ஷீட், பாய் மற்றும் துணி என பலவகையான பொருட்கள் வாழை நாரில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த சில பொறியியல் மாணவர்கள் வாழை நாரை வைத்து யாருமே யோசிக்க முடியாத ஒன்றை தயாரித்துள்ளனர். அதாவது வாழை நாரில் கட்டட பயன்பாட்டிற்கு அதிகம் பயன்படுத்தும் டைல்ஸை வடிவமைத்துள்ளனர். இது எப்படி சாத்தியம் என்று பலரும் ஷாக்காகி வருகிறார்கள்.
பெங்களூரு எம்விஜே பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் அமித், கார்த்திக், பிரசன்னா மற்றும் பிருத்விராஜ் ஆகிய மாணவர்கள் சேர்ந்து தான் இந்த வாழை நார் டைல்ஸை வடிவமைத்துள்ளனர். வாழை நாரில் இருந்து தயாரிக்கப்படும் டைல்ஸ் வலிமையாக இருக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அந்த மாணவர்கள் செராமிக் டைல்ஸ் சராசரியாக 1,300 நியூட்டன்ஸ் (newtons) வரை அழுத்தத்தைத் தாங்கும்.
அதுவே வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படும் டைல்ஸ் சராசரியாக 7,500 நியூட்டன்ஸ் வரை அழுத்தத்தைத் தாங்கும். எனவே வாழை நார் டைல்ஸ் செராமிக் டைல்ஸை விட ஏழு மடங்கு வலிமையானவை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த டைல்ஸை தயாரிக்க பிசின் பூசப்படுவதால் `waterproof’ தன்மையும் இந்த டைல்ஸுக்கு உண்டு எனக் கூறியுள்ளனர். இருப்பினும் இதை விற்பனைக்கு கொண்டு வர இன்னும் சில சோதனைகள் மேற்கொள்ள இருப்பதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.