தெருவில் இருந்த குப்பைகளை அகற்றிய நபருக்கு அடுத்த ஜாக்பாட் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவரை காவலர் ஒருவர் கழுத்தில் முழங்கால் வைத்து அழுத்தியதில் மூச்சு விடமால் இறந்துபோனார். இச்சம்பவம், அந்நாட்டு மக்களிடையே போராட்டத்தை தூண்டியதோடு இணையத்தில் பரவி உலக நாடுகளையே உலுக்கியது. இதன் காரணமாக பெரும் போராட்டம் காவலர்களுக்கு எதிராக நடந்தது. போராட்டம் நடைபெற்ற இடங்களில் அதிகமான குப்பைகளும் சேர்ந்தன.
இதைக்கண்ட ஆன்டனியோ குவைன் என்கிற 18 வயது இளைஞர் ஒருவர், சுற்றுச்சூழல் மற்றும் சமூக தூய்மையை கருத்தில் கொண்டு அந்த குப்பைகளை நீக்க முடிவு செய்தார். இதற்காக பல மணி நேரங்களை செலவு செய்து ஒவ்வொரு தெருவாக சுத்தம் செய்துள்ளார்.
இச்சம்பவம் இணையம் மற்றும் செய்திகளில் வெளியாகி பலரிடம் பாரட்டை பெற்றது. இளைஞரின் சமூக அக்கறையை பாராட்டி அதே பகுதியைச் சேர்ந்த மட் பிளாக் என்பவர் தனது “போர்டு மஸ்டங்” காரை இந்த இளைஞனுக்காக பரிசாக வழங்கியுள்ளார்.
மேலும் பஃபலோ பகுதியில் உள்ள கல்லூரியில் அந்த இளைஞர் படிக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவரது கல்லூரி படிப்பு செலவை நிர்வாகமே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இளைஞரின் சமூக அக்கறையை பலரும் பாராட்டி வருகின்றனர்.