நம் அறிவியலின் மேம்பாட்டினால் உலகம் உள்ளங்கையில் வந்துவிட்டது எனலாம். இதன் மூலம் நமக்கு நல்லதும் உள்ளது தீமையும் உள்ளது. இதன் விளைவாக நம் மக்களால் ஆண்டிப்பட்டியில் இருந்து அமெரிக்கா வரை ஒருவரை தொடர்பு கொள்ள இயலும். ஒருவரின் பெயர் அல்லது இருப்பிடம் இதுபோன்று ஏதாவது ஒரு தகவல் இருந்தாலே அவர்களை கண்டு பிடிப்பதற்கு ஃபேஸ்புக் மிகவும் உதவியாக உள்ளது. தகவல்களை உலகம் முழுதும் உள்ள மக்களிடம் தெரிவிக்கவும் உதவிகரமாக உள்ளது.
கடந்த சில வருடங்களாக பேஸ்புக்கின் மூலம் பல உறவுகள் உருவாகி வருகிறது. பேஸ்புக்கில் அறிமுகமாகி காதல் திருமணங்களும் செய்து வாழ்கின்றனர். இதை சிலர் ஆயுதமாகக் கொண்டு ஏமாற்றியும் வருகின்றனர்.
அவ்வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஒரடியம்புலத்தை சேர்ந்தவர் விவேக் ரவிராஜ். இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறையை சேர்ந்த பெண்ணிற்கும் விவேக் ரவிராஜுக்கும் பேஸ்புக் மூலம் காதல் ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் இவர்கள் நெருங்கி பழகி அதன் விளைவாக அப்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் அவரிடம் கூறியுள்ளார். ஆனால் ரவிராஜ் அக்கருவை கலைக்குமாறு கேட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அப்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி கருவை கலைக்க சொல்லியுள்ளார். இவரை நம்பிய இளம்பெண்ணும் கருவை கலைத்து உள்ளார்.
ஆனால் இந்த சம்பவம் நடந்ததற்கு பிறகு, ரவிராஜ் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் நம்பிக்கையை இழந்த அப்பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனாலும் ரவிராஜ் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், தன்னோடு காவலர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், அவர் பேசிய ஆடியோவும் வெளியிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், அப்பெண் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். ஒன்றரை வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. தற்போது உதவி ஆய்வாளர் ரவிராஜ் மீது வழக்கு பதிவு செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, ஏமாற்றுதல், ஆபாசமாகத் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழும், அவரது தாயார் ராசாத்தி மீது 2 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்நகர மக்கள் அப்பெண்ணை இந்த தைரியமான செயலுக்காக பாராட்டியுள்ளனர்.