ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!

Photo of author

By Amutha

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!! 

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது. அவருடன் கூட வந்தவரையும் அந்த கும்பல் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட  நெடுவரம்பாக்கத்தில் உள்ள பெரிய காலனியில் வசித்து வருபவர் லட்சுமணன் வயது 32. இவர் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது சகோதரர் இளங்கோவன் வயது 29. இவர் திமுகவில்  ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் தனி தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு இளங்கோவன் ஏற்பாட்டின் படி அந்த பகுதியில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதுக்கு போலீஸ் அனுமதி வாங்காமல் போனதோடு மட்டுமில்லாமல் அந்த ஊரினைச் சேர்ந்த தென்னவன் என்பவரது பேரினை கல்வெட்டில் பொறிக்காமல் விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முன்விரோதம் ஏற்ப்பட்டுள்ளது.

இதையடுத்து அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் கடந்த ஜனவரி மாதம்  சேதப்படுத்தப் பட்டது. இந்த வழக்கில் தென்னவன், தவசி, சவுந்தரராஜன் , அரவிந்தன், மணிகண்டன், ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற விழாவில் தென்னவன் கும்பல் , இளங்கோவன் ஆதரவாளர்களைத் தாக்கி உள்ளனர்.

இது தொடர்பாக லட்சுமணன், இளங்கோவன் ஆகிய இருவரும் சோழவரம் போலீசில் புகார் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது நெடுவரம்பாக்கம் பெரிய காலனி சாலைப் பகுதியில் கத்தி மற்றும் அரிவாளுடன் அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் இருவரையும் வெட்டத் தொடங்கியது. இருவரும் தப்பி ஓட தொடங்கிய போது சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக தாக்கியதில் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இளங்கோவன் இருகைகளும் வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு போராடினார்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு வரவே மர்மக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சோழாவரம் போலீசார் இளங்கோவனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த லட்சுமணன் உடலை மீட்டு ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதால் அந்த பகுதியில் [பதற்றம் நிலவி வருகிறது. எனவே அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.