உலக அளவில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!
இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்த படம், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்த படத்தில், ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே வரும்படி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அதாவது இந்த படத்தில், பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து சாதனைப் படைத்திருந்தார். இதற்காக இந்தப் படம் ஆசிய சாதனை புத்தகத்திலும் மற்றும் இந்திய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று வரவேற்பை பெற்று, பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில், இரண்டு தேசிய விருதுகளை இந்த படம் வென்றுள்ளது.
மேலும் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிப்பு ஆகியவற்றுக்கான விருதுகளையும் வென்றுள்ளது. இந்த படம் தமிழ் மொழியில் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தி மொழியில் ரீமேக் செய்யப்படும் இந்த படத்தை நடிகர் பார்த்திபனே இயக்க உள்ளார். இந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்கிறார்.
இந்த நிலையில், ஒத்த செருப்பு திரைப்படம், இந்தோனேசியாவின் ‘பஹாஸா’ மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ‘ஒத்த செருப்பு’ படத்தின் இயக்குனரும் மற்றும் அந்த படத்தின் தனி ஒரு நடிகருமான பார்த்திபன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம், இந்தோனேஷியாவின் ‘பஹாஸா’ மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.