தீபாவளி வசூல் மாநில முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு! 1.12 லட்சம் சிக்கியது!

Photo of author

By Sakthi

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வான வேடிக்கை என்று சிறுவர்களுக்கு கொண்டாட்டம்தான். அதேபோல அரசு துறைகளிலும் சில ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வந்து விட்டால் பல்வேறு பணிகளுக்காக அந்தந்த துறையை நாடி வருவோரிடம் லஞ்ச வேட்டை நடத்த ஆரம்பித்து விடுவார்கள்.

வணக்கம் போல இந்த வருடமும் அது தொடர்ந்ததால் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் மாநிலம் முழுவதும் இருக்கின்ற 30-க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் விருந்தினர் விடுதியில் அதிரடியாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கு வராத 75 லட்சம் ரூபாய் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

அடுத்ததாக நாமக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தில் சாலை ஒப்பந்தக்காரர்களிடம் அதிகாரிகளும் பணம் வசூலிப்பதாக வந்த தகவலை தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கு வராத 8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகரில் மாவட்ட பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனரிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத 6 லட்சத்து 68 ஆயிரம் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் 4,26000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட தொழில் மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பொது மேலாளர் அறையிலிருந்து கணக்கில் காட்டப்படாத 3,55000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது ரைஸ் மில் அமைக்க அனுமதி வழங்குவதற்கு தரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல ஓசூர் சோதனை சாவடிகளில் கணக்கில் காட்டப்படாத 2.25 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினத்தில் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1,20000 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

அதேபோல திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் கோபிசெட்டிபாளையம், திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் அரசு அலுவலகங்களில் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதோடு கடலூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது இப்படி வருவாய், போக்குவரத்து, வேளாண்மை, நகர ஊரமைப்பு, தீயணைப்பு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற பல்வேறு துறைகளில் நேற்று நடைபெற்ற சோதனைகளில் தீபாவளி லஞ்சப்பணம் 1 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்திருக்கிறது.