தக்காளிக்கு பதிலாக ஆப்பிளா?? எடப்பாடி பழனிசாமியின் புத்திசாலித்தனமான கருத்து!!
தமிழகம் முழுவதும் தற்போது பொது மக்களுக்கு பெரிய அளவில் எழுந்துள்ள ஒரு பிரச்சனை தான் விலைவாசி உயர்வு. அத்தியாவசியப் பொருட்களின் விலை தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது.
காய்கறிகளின் விலை, பால் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை என அனைத்தும் தற்போது தாறு மாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை அதிகளவு உயர்ந்து வருகிறது.
ஒரு கிலோ ரூபாய் இருபது முப்பது என்று விற்ற காலம் மாறி தற்பொழுது ஒரு கிலோ தக்காளி ரூபாய் நூறைத் தாண்டி இருநூறு வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் சாமானிய மக்களும் நடுத்தர மக்களும் மிகவும் பாதிப்படைந்து உள்ளனர்.
இந்த விலைவாசி உயர்வு குறித்து ஏராளமான அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக கட்சிக்காரரான எச்.ராஜா, தக்காளி சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் அதன் விலை குறைந்துவிடும் என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறியது அனைவரின் மத்தியிலும் வேடிக்கையாக இருந்தது. இவரைத்தொடர்ந்து தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி தக்காளி விலை உயர்வு குறித்து தனது கருத்துக்களை கூறி உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது, இன்று ஒரு கிலோ தக்காளியின் விலையானது நூறு ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது.
அப்படி என்றால் ஒரு தக்காளியின் விலையே பத்து ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. எனவே, தக்காளிக்கு பதிலாக ஆப்பிளை பயன்படுத்தலாம் போல, ஏனென்றால் அந்த அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.
மேலும், காய்கறிகளின் விலை மட்டும்தான் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்களின் வருமானம் அப்படியே தான் இருக்கிறது. இதுதான் திமுகவின் ஆட்சி என்று அலட்சியப்படுத்தி கூறினார்.
மேலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் எடப்பாடி பழனிசாமி கடந்த இருபதாம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.