இபி யில் பெயர் மாற்றம் செய்யப்போகிறீர்களா?? இந்த ஆவணங்கள் அனைத்தும் வேண்டும்!!
தமிழகம் முழுவதும் மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கு நேற்று முதல் சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வது, வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்வது இருந்தாலும் இலவசமாக செய்து கொள்ளலாம்.
இதற்கு தேவைப்படும் ஆவணங்களான, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அட்டை, நகராட்சி அல்லது மாநகாட்சியில் வசித்து வந்தால் சொத்து வரி செலுத்திய ஆவணம் முதலியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
இதில் இறந்தவர் பெயரை எடுத்துவிட்டு வாரிசு பெயரை சேர்க்க வேண்டும் என்றால், அதற்கு சொத்து பகிர்வு பத்திரம் மற்றும் செட்டில்மென்ட் பத்திரம் தேவைப்படும். பொது மின்சாரத்திற்கு குடும்ப உறுப்பினர் அனைவர்களின் கையெழுத்து மற்றும் சொத்து பத்திரங்கள் தேவைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது, மின்சார கட்டணம் ஆயிரம் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் என்று வரும் பட்சத்தில் அதை ஆன்லைனில் மட்டுமே கட்டுவதற்கான முறைகள் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கியமான அறிவிப்புகளை தினமும் வழங்கி வருகிறார். அதாவது, விரைவில் அனைவரது வீட்டிலும் மின்சாரத்தை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.
இந்த ஸ்மார்ட் மீட்டரானது தானாகவே கரண்ட் பில்லை சரியாக கணக்கெடுத்துக் கொள்ளும்.
பிறகு இதற்கான மின் கட்டணம் அனைவர்க்கும் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும். இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பொருத்துவதற்கு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இதன் மூலமாக வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அதை மின்வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம்.எனவே, இனி மின் கணக்கீட்டாளர்கள் தேவை இல்லை என்று அறிவித்துள்ளது.
மேலும், இரவில் கூடுதலாக இருபது சதவிகிதம் மின்சார கட்டணம் வசூல் செய்வதாக கூறிய மத்திய அரசின் அறிவிப்பை தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.