மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 12பேர் உயிர் இழந்த நிலையில், அதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அதிரடி சோதனையில் 48 மணி நேரத்தில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14பெண்கள் உட்பட்ட 74 கள்ளச்சார வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 12 பேர் உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் டிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐ ஜி கண்ணன் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கடந்த 48மணி நேரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை கைது செய்ய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் மூன்று உட்கோட்டத்தில் கடந்த 48மணி நேரத்தில் நடத்திய அதிரடி சோதனையில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14பெண்கள் உட்பட்ட 74 கள்ளச்சாராயம் வியாபாரிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 870 லிட்டர் கள்ளச்சாராயமும் 446 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.