தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ததாக அபராதம் விதித்த பொது சுகாதாரத் துறை அதிகாரி மீது தாக்குதல்
சென்னை அரும்பாக்கம் பாரதிதாசன் தெருவில் இலக்கியா வறுக்கடலை என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையை தர்மர் மற்றும் அவரது மனைவி ஜான்சி ஆகியோர் கடந்த 40 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
நான்கு மாதங்களுக்கு முன்பு மண்டலம் 8 யை சேர்ந்த பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பேப்பர் கப்புகளை விற்பனை செய்வதாக கூறி 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதன்பிறகு மீண்டும் அந்த கடைக்கு வந்த பொது சுகாதாரத்துறை ஆய்வாளர் கேசவன் தலைமையிலான அதிகாரிகள் மார்கெட் முழுவதும் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது இலக்கியா வறுக் கடலை கடை ஆய்வு செய்தார். இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக கூறி 2000 ரூபாய் அபதாரம் விதித்துள்ளனர்.இதற்கு கடையின் உரிமையாளர் ஜான்சி மறுப்பு தெரிவித்து பேசி உள்ளார். சென்னை பிராட்வேயில் லட்சக்கணக்கான பொருட்கள் இதே போன்று விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இது பிளாஸ்டிக்கில் இந்த பொருட்கள் வராது என்றும் அவர் அதிகாரிடம் கூறியுள்ளார்.
ஆனால் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை ஏற்க மறுத்து அவருக்கு 2000 ரூபாய் அபதாரம் விதித்துள்ளனர். இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது கடையின் உரிமையாளரான தர்மர் கடைக்கு வருகை தந்தார். குடி போதையில் இருந்த அவர் கடையில் இருந்த சிறிய கத்தியை கொண்டு அதிகாரியை தாக்க முயற்சி செய்து உள்ளார். அவ்வாறு தாக்க முயற்சித்த போது அதிகாரிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்