கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்து- தீபா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. வேலை காரணமாக சித்தூர் சென்ற தீபாவிற்கு கடந்த 15 ஆம் தேதி சித்தூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இதன்பின்னர் குழந்தையோடு திருக்கோவிலூர் அருகே மிலாரிப்பட்டு ஊரில் வசிக்கும் தனது தாய் வீட்டிற்கு தீபா வந்துள்ளார். இதனிடையே அங்குள்ள ஆற்றில் யாருக்கும் தெரியாமல் குழந்தையை தீபா வீசியுள்ளார்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று பார்த்தபோது பச்சை குழந்தை அலறிக்கொண்டிருந்தது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த பின்னர் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஒரு மணி நேரத்தில் ஆற்றில் வீசிச் சென்ற தீபாவை சாதுர்யமாக கண்டுபிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில், தான் ஏற்கனவே வறுமையில் இருப்பதாகவும் பிறந்தது “பெண் குழந்தை’ என்பதால் வளர்க்க முடியாது என்ற காரணத்தால் ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
இறுதியாக காவல் உதவி ஆய்வாளர் தீபாவுக்கு நல் அறிவுரைகளை கூறியதோடு சற்று உடல்நலம் பாதித்த குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.