சென்னையில் ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 14 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் செல்போனை சார்ஜ் போடும்போது சில தவறுகளை செய்கின்றனர். இதனால், பல விபரீத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. அதுவும், இரவு நேரத்தில் செல்போன்களை படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதேபோல், இன்னும் சிலர் சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போனில் பேசுகின்றனர். இதனால், ஃபோன் சில சமயம் வெடித்து உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் தான், தற்போது சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை அடுத்த எர்ணாவூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முகுந்தன். இவரது மூத்த மகள் அனிதா (14), அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர், சனிக்கிழமை மாலை ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.
இதனைப் பார்த்த பெற்றோர், அதிர்ச்சி அடைந்து உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எண்ணூர் காவல்துறையினர், மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.