மக்களை அதிரடியாக மிரட்டி வரும் பிபர்ஜாய் ! ஏராளமான மக்கள் வெளியேற்றம் மத்திய சுகாதார துறை அறிவிப்பு!
பிபர்ஜாய் புயல் மக்களை மிகவும் பயமுறுத்தி வருவதால் குஜராத் மாநிலத்தில் இருந்து சுமார் 8000 மக்கள் அவர்கள் வாழிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. தற்போது அதிதீவிர புயலாக உருமாறியுள்ள இந்த பிபார்ஜாய் புயலானது வியாழக்கிழமை பிற்பகல் குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடா பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புயலானது குஜராத் பகுதியில் கரையை கடக்கும் போது அந்த மாநிலத்தின் பகுதிகளான கட்ச், தேவ பூமி துவராகா, போா்பந்தா், ஜாம்நகா், ராஜ்கோட், ஜுனாகா், மோா்பி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய கூடும். மேலும் அங்கு காற்றின் வேகமானது மணிக்கு
135 முதல் 145 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் குஜராத் கடலோர மாவட்டங்களுக்கு பலத்த புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதோடு மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் கடலோர மாவட்டங்களில் வசித்து வந்த சுமார் 8000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு புயல் தீவிரம் குறையும் வரை அங்கேயே தங்க வைக்கப்படுவர் என மத்திய சுகாதார துறை அமைச்சர் மான்சுக் மாண்டாவியா தெரிவித்தார்.