சந்தானம் ஜோடியாக மீண்டும் பிக்பாஸ் நடிகை!
சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வரும் ’டிக்கிலோனா’. படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
சந்தானம் தற்போது நடித்து வரும் படங்கள் படங்களில் ஒன்று ’டிக்கிலோனா’. இந்த படத்தில் அவர் முதல் முறையாக மூன்று வேடத்தில் நடித்து வருகிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் என்பவர் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சந்தானம் நடிக்கும் மூன்று கேரக்டர்களில் ஒரு கேரக்டருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரும் காமெடி நடிகையுமான மதுமிதா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அவர் இந்த படத்தில் வழக்கறிஞர் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
மேலும் சந்தானத்துடன் அவர் வழக்கறிஞர் உடையில் இருக்கும் போஸ்டர்களும் தற்போது இணைய தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தில் சந்தானம் ஜோடியாக மதுமிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது