தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் பாஜக! கூட்டணி வெல்லுமா?
வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில் அதிமுக – திமுக அல்லாத மூன்றாவது கூட்டணியாக பாஜக-டிடிவி-ஓபிஎஸ் கூட்டணி உருவெடுக்குமா, நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவர்களா என பல வியூகங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை பாஜக அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில், அதிமுக ‘பாஜக உடனான கூட்டணி இல்லை’ என்பதை மட்டும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கடந்த இரு மக்களவைத் தேர்தல்களிலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. இரண்டாவது முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்து இருந்தாலும் ‘மோடி எதிர்ப்பு’ அலையினால் மொத்தம் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் தோல்வியை தழுவியது. வெற்றி பெற்ற ஒரு தொகுதியும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் களமிறங்கிய தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்க அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பது இருவருக்குமே சாதகமாகவே உள்ளது. மேலும் இது திமுக விற்கு பாதகமாக கூட அமையலாம். ஏனெனில் அதிமுக-பாஜக கூட்டணி முறிவிற்கு பின்பு பாஜக எதிர்ப்பாளர்கள் அல்லது சிறுபான்மையினர் அதிமுகவிற்கு தற்போது ஆதரவாக இருக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். இதன் மூலம் கணிசமாக அதிமுக, சிறுபான்மையினரது வாக்கு வங்கிகளைப் பெற வாய்ப்புள்ளது. எனவே திமுக இதில் நெரிசல்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஆட்சியை நிலைநாட்ட விரும்பும் பாஜக தற்போது ஓபிஎஸ்-டிடிவி கூட்டணியையும், அதிமுக-திமுக கட்சி அல்லாத அதிருப்தியாளர்களையும் இணைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, “அரசியலில் வருங்காலத்தில் ஓ.பன்னீர் செல்வமும் நானும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம். மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன். ஒரு அரசியல் கட்சி மற்றொரு அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதில் எந்த தவறும் இல்லை.
தமிழக மக்களுக்கு எதிராக எந்த கட்சி செயல்பட்டாலும் அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என உறுதியாக கூறியிருந்தேன் அந்த வகையில் மதிய பாஜக அரசு முன்பு தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை திணிக்க முயற்சி செய்தது தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து மத்திய அரசு மாறியுள்ளதால் முக பாஜக மீது கடுமையான எதிர்ப்பை காட்டவில்லை.” என பாஜகவுக்கு ஆதரவாக தனது பேச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
இதிலிருந்து பாஜக-டிடிவி-ஓபிஎஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது என்பதை அறியலாம். இது தமிழகத்தில் மூன்றாவது பெரும் கூட்டணியாக உருவெடுக்கலாம்.
இந்த மூன்றாவது கூட்டணியின் முதல் அடியாக இந்த வருடத்தின் முதலாக கடந்த ஜனவரி இரண்டாம் தேதி திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் போன்ற பல கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும் தென் தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் ஆதரவு கிடைத்தால் முக்குலத்தோர் வாக்குகளை அதிகமாக பாஜக பெற முடியும்.
அதேபோல் பாமகவை பொறுத்தவரையில், அதிமுகவில் மிகக் குறைந்த இடங்களை ஒதுக்கும் நிலையில் அவர் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி வேறு கூட்டணியில் இணைய வாய்ப்புகள் அதிகம். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு, 10.5% இட ஒதுக்கீடு ரத்தானது, என திமுக மீது அடுத்தடுத்த அதிருப்தியால் திமுகவுடன் கூட்டணி ஏற்படுத்துவது என்பதும் கேள்விக்குறிதான்!
ஒருவேளை பாமக கேட்கும் இடங்களை பாஜக வழங்கினால் கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெருவாரியான வன்னியர் வாக்குகளையும் பாஜகவால் பெற முடியும்.
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில் அண்ணாமலையை முன்னிறுத்தி கொங்கு மக்களின் வாக்குகளையும் மற்ற இந்து, பிராமணர்களின் வாக்குகளையும் பாஜகவால் பெற முடியும்.
மேலும் தமிழகத்தில் பிரதமர் மோடி ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக தமிழக மக்களை சந்தித்ததும் பாஜகவிற்கு கூடுதல் பலமாக உள்ளது.
கூடுதலாக தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்ற உதிரி கட்சிகள் பாஜக கூட்டணியில் இணைந்தால் கணிசமான வாக்குகளை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்படியான கூட்டணியுடன் இணைந்து கூர்ந்த அரசியல் நோக்குடன் செயல்பட்டால் பாஜக கடந்த இரண்டு தேர்தல்களை காட்டிலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதே தற்போதைய அரசியல் வியூகமாக உள்ளது.