முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன்; சென்னையில் பாட்ஷா நடத்திய பரபரப்பு சம்பவம்!!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல் தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், சென்னை பசுமை சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். அந்த வெடிகுண்டி இன்னும் கொஞ்ச நேரத்தில் வெடிக்கப் போகிறது உங்களால் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று கூறிவிட்டு உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இத்தகவலை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது சம்பந்தமாக முதல்வரின் வீட்டு வெளிப்பக்கம் வெடிகுண்டி சோதனை நடத்துமாறு உத்தரவு பறந்தது. முதல்வர் வீட்டின் உள் பகுதியிலும், வெளிப்பகுதியிலும் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் எவ்வித வெடிகுண்டும் கிடைக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேற்கொண்ட விசாரணையில் சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. மது போதை தலைக்கேறி தவறாக போன் பேசியது விசாரணையில் தெரியவந்தது.
இதே சிக்கந்தர் பாஷா கடந்த ஜனவரி மாதமும் முதல்வரின் வீட்டிற்கு மிரட்டல் விடுத்து கைதானவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதன் பிண்ணனியில் வேறு யாரேனும் உள்ளார்களா என்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.