வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் கூட்டணி தொகுதி பங்கீடு, முடிந்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதிமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலால் கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ.வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் தோப்பு வெங்கடாசலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர், மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். ஆனால் அதிமுகவில், அவருக்கு சீட் வழங்கவில்லை. பெருந்துறை ஊராட்சி ஒன்றி செயலாளர் ஜெயகுமார் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ஜெயகுமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் அதிருப்தி அடைந்த தோப்பு வெங்கடாசலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருந்துறையில் ஆதரவாளர்கள் உடன் நடந்த கூட்டத்தில் கூட நான் என்ன தவறு செய்தேன் என கண்ணீர் விட்டு கதறி அழுதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனக்கு சீட் கிடைக்காததால் விரக்தியில் இருந்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், அதிமுகவுக்கு எதிராக, பெருந்துறை தொகுதியில், சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, நேற்று வேட்புமனுவும் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி சொந்த கட்சி வேட்பாளரையே எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்தை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து, சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள காரணத்தாலும், ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. தோப்பு என்.டி. வெங்கடாச்சலம், M.L.A., (கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.