மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முக்கிய வீரர்! மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
பல மாதங்களுக்கு பிறகு இந்திய அணியின் முன்னணி வீரர் ஒருவர் மீண்டும் அணியில் இணைவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்திய அணியுடன் மோதும் மேற்கு இந்திய தீவுகள் அணி இதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 20 ஓவர் போட்டியான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் பங்கேற்கின்றன.
இந்நிலையில் இதற்காக முதல் கட்டமாக தற்போது நடந்து முடிந்த முதலாவது டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து நடக்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடா் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 15 ஆம் தேதி நாளை துவங்குகிறது. அடுத்ததாக இரண்டாவது ஒருநாள் போட்டி 18 ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது ஒருநாள் போட்டி 22 ஆம் தேதி கட்டாக்கிலும் நடக்கிறது.

இந்நிலையில் 2 வதாக நடக்கவுள்ள ஒருநாள் ஆட்டத்துக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும் இணையவுள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வீரரான பும்ராவுக்கு அவரது கழுத்தின் கீழ்பகுதியிலும், கால் கணுக்கால் பகுதியிலும் காயம் இருந்தது.இதனையடுத்து அவர் அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
கடைசியாக பும்ரா, இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த போது விளையாடினார். அதன் பிறகு காயம் காரணமாக அவர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்காமல் சிகிச்சை எடுத்து வந்தார்.
இதனிடையே அந்த காயம் சரியானதையடுத்து பும்ரா, விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் பங்கேற்க உள்ளார் என்று தெரிகிறது.