எல்லா மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தற்போதைய நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் மற்றும் வேறு எந்தெந்த தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரனோ இரண்டாம் அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த மே மாதம் 24 ஆம் தேதியிலிருந்து 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் இந்த ஊரடங்கு உத்தரவானது ஒரு சில தளர்வுகளுடன் ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது
இதனடிப்படையில் தற்போது வரை தமிழகத்தில் ஐந்து முறை இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதி முதல் முடிவடைகிறது.
இந்த நிலையில் 6 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்தும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்தும் தமிழக முதல்வர் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை தொடங்குவது குறித்தும் கருத்து கேட்கப்பட்டுள்ளது
இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஏற்கனவே தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரித்துள்ளனர். அந்தவகையில் மூன்றாவது பிரிவில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்து சேவைக்கு கடந்த 25ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அடுத்த கட்டமாக சென்னையில் புறநகர் ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. இதனையடுத்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் அவர்களது மாவட்டங்களில் எப்போது பேருந்து சேவை தொடங்கப்படும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அந்தவகையில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட மூன்று வகை மாவட்டங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வகையில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் பொது போக்குவரத்தை தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.