ஆங்காங்கே கிடங்குகள் கட்டவும்! – ஓ. பன்னீர்செல்வம் முதல்வருக்கு கோரிக்கை!

0
104

மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி வரும் செய்திகள் கவலை அளிப்பதாகவும் ,இதுபோன்ற நிலை வராமலிருக்க அரசுக்கு சொந்தமான கிடங்குகளில் நெல் மூட்டைகளை வைக்கவும், கூடுதலாக ஆங்காங்கே நெல் கிடங்குகள் கட்டவும் , நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓபிஎஸ் அவர்கள் முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் அந்த கோரிக்கையில், “சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்த வெளி களத்தில் வைக்கப்பட்டதன் மூலமாக மழையில் நனைந்து சேதமடைந்தது. உடனே மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்கள் தோப்பூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த சூழ்நிலையிலும் இரண்டு தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இதே மாதிரியான 10 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் சேதமடைந்தன.

இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்னப்பன்பேட்டை களையார்கோவில் பொன்னாப்பூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் தார்பாய் போட்டு மூடப்பட்டு மூடப்படாமலும் குவியல் குவியலாக அடைக்கப்பட்டு இருந்ததாகவும் , மேலும் திருச்சி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இந்த மாதிரியான நெல் மூட்டைகள் மழையில் சேதமடைந்துள்ளதாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை முன்கூட்டியே அளிக்கின்ற நிலையிலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது கவலையை அளிக்கிறது.

எனவே தினசரி வானிலை ஆய்வு மையம் தகவல் அடிப்படையில் நெல் மூட்டைகளை மத்திய மற்றும் மாநில அரசுக்கு சொந்தமான கிடங்குகளில் அல்லது காலியாக உள்ள அரசு கட்டடங்களில் வைக்கவும், எதிர்கால திட்டமாக ஆங்காங்கே கிடங்குகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்”, என்று பன்னீர்செல்வம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
Kowsalya