வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர் திடீர் வாபஸ்..!!
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில், இந்த முறை மோடியை எதிர்த்து இந்து மகா சபை சார்பில் திருநங்கை ஹிமாங்கி சகி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட சமயத்தில் அந்த அறக்கட்டளையில் இந்து மகா சபை பெயரை சேர்க்கவில்லை. அதேபோல ராமர் கோவில் திறப்பு விழாவிற்கும் இந்து மகா சபையினரை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த இந்து மகா சபையினர் மோடியை எதிர்க்க முடிவு செய்து திருநங்கையான ஹிமாங்கி சகியை அவர்களின் வேட்பாளராக நிறுத்தினார்கள்.
வேட்புமனு தாக்கல் செய்தபோது கூட திருநங்கை ஹிமாங்கி சகி நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் போட்டியிடுவதாக அறிவித்தார். இந்நிலையில், திடீரென மனதை மாற்றி கொண்டார் இந்து மகா சபை அவர்களின் முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளது. அதனை தொடர்ந்து ஹிமாங்கி சகியும் அவரின் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
இதுமட்டுமல்ல பிரதமர் மோடியை போட்டியின்றி தேர்ந்தெடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படி திடீரென அவர்கள் மனம் மாறியது எப்படி? தேர்தலில் இருந்து வாபஸ் பெறுவது ஏன்? என்பது போன்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், இதில் ஏதாவது அரசியல் தலையீடு உள்ளதா? என்று கூட சந்தேகித்து வருகிறார்கள். இதனால் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.