வேட்பாளரின் வெற்றியே முதன்மை நோக்கம்! எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு கூடாது! – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் அவசர முடிவு கூடாது. இன்னும் காலம் உள்ளது. என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக கரூர் செல்லும் வழியில் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
ஒருமனதாக எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் அவர் பின்னால் அனைவரும் அணிவகுத்து நிற்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பப்பட்டாலும் நம் பலம் என்ன? ஓட்டுகள் இரண்டு மூன்றாக பிரிந்தால் என்ன ஆகும்? என்பதை எல்லாம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். வேட்பாளர் விஷயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என அவசர முடிவு எடுக்க முடியாது.
வேட்பாளர் குறித்து முடிவெடுக்க இன்னும் காலம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு வேண்டிய ஆதரவையும் உதவிகளையும் செய்ய வேண்டியது கூட்டணி கட்சிகளின் கடமை. இந்த இடைத்தேர்தல் பலப்பரீட்சை அல்ல. நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றியே முதன்மை நோக்கம். இதில் போட்டிக்கோ பொறாமைக்கோ அவசியம் இல்லை. அதிமுக பெரிய கட்சி. அதில் ஏற்கனவே வெற்றி பெற்று அமைச்சரான வேட்பாளர்கள் நிறைய பேர் உள்ளனர்.
மேலும் அவர் பேசுகையில் மற்ற கட்சிகளை பற்றி பேச இவிகேஎஸ் இளங்கோவனுக்கு எந்த தகுதியும் இல்லை. வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தான் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. அறநிலை துறை சம்பந்தமாக நான் பேசிய கருத்துக்கள் அனைத்தும் ஆர்டிஐ மூலமாக பெறப்பட்ட உண்மைகள். அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் கோவிலில் 5309 மாடுகள் காணாமல் போன விவகாரத்தில் மறுத்து பதில் கூறட்டும். நாம் வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கருத்தினை ஆதாரப்பூர்வமாக அமைச்சர் கூற வேண்டும் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.