ஆதார் எண் போல் மாணவர்களுக்கு “அபார் எண்” வழங்க மத்திய அரசு முடிவு!!
நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு என்று மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடிவு செய்திருக்கிறது.
கல்லூரிகளில் சேரும் மாணவ,மாணவிகளின் விவரங்களை வைத்து போலி மதிப்பெண் சான்றிதழ்கள்,ஆவணங்கள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டு மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
பலர் அரசு வேலை பெறுவதற்காக போலி கல்வி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்வதும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.இந்நிலையில் போலி சான்றிதழ் முறைகேட்டை தடுக்கவும்,மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் மத்திய அரசு “அபார் ஐடி” திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.
அது என்ன அபார் ஐடி? என்று கேள்வி எழுப்பும் மாணவர்களுக்கான விரிவான விளக்கம் இதோ.ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஆதார் கார்டு போல தான் இந்த அபார் ஐடி.ஆதார் இந்திய குடிமகன்களின் அடையாளம் ஆகும்.அனைத்து இடங்களிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டதன் காரணம் அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மக்களுக்கு தடை இன்றி சென்று சேர்வதற்காக தான்.அதேபோல் தான் அபார் மாணவர்களுக்கு அடையாளம் ஆகும்.இந்த அபார் அடையாள அட்டை வைத்து மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அவர்களின் கல்வி நிலை உள்ளிட்ட செயல்பாடுகளை மத்திய அரசால் கண்காணிக்க முடியும்.
மேலும் போலி மதிப்பெண் சான்றிதழ் வைத்து உயர் கல்வியில் சேர்வது,அரசு மற்றும் தனியார் பணிகளில் சேர்வது போன்ற முறைகேடுகள் இந்த அபார் ஐடி மூலம் எளிதாக கண்டறிய முடியும் என்பதினால் இனி இதுபோன்ற மோசடிக்கு இடம் இருக்காது.மாணவர்களின் மதிப்பெண்,கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல் அனைத்தும் அபார் ஐடியில் இணைக்கப்பட்டு விடும்.இதனால் மாணவர்கள் பள்ளி,கல்லூரி மாறுதல் வேலைக்கு செல்லுதல் உள்ளிட்ட இடங்களில் அபார் ஐடி காண்பித்தாலே போதும் அவர்களின் முழு விவரங்களையும் நிறுவனங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியம்.
ஆதார் கார்டு போலவே அபார் கார்டிலும் 12 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு,ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட வரிசையில் தற்பொழுது ஒரே நாடு ஒரே மாணவன் திட்டம் அறிமுகமாக உள்ளது.தற்பொழுது இந்த திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.