கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுக இடையே கும்மாங்குத்து!!
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுகவினர் இடையே பதவிக்கான மோதல் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சியில் சுயேட்சையாக வெற்றிபெற்ற கவுன்சிலர்களை திமுகவினர் திட்டமிட்டு கடத்திச் சென்றதாக அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
அங்குள்ள ஒட்டுமொத்த 19 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடத்தில் 9 இடங்களை திமுக கூட்டணியும், 6 இடங்களை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளது. ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க 10 கவுன்சிலர் தேவை என்கிற பட்சத்தில், இரு கட்சியினரும் மீதமுள்ள 4 சுயேட்சை உறுப்பினர்களிடமும் தனக்கு சாதகமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த சுயேட்சை கவுன்சிலர்களை நிகழ்ச்சி முடிந்ததும் திமுகவினர் தனி வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயற்சி செய்தனர். இதைப் பார்த்த அதிமுகவினர் வாகனத்தை தடுத்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் தடையை மீறி வாகனம் சென்றுவிட்ட காரணத்தால் சுயேட்சை வேட்பாளர்கள் கடத்தப்பட்டதாக கூறி அதிமுகவினர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோன்று கரூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி பகுதியிலும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு மோதல்கள் நடந்துள்ளது.