இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: -வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: -வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாற வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 760 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை அதிகனமழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் காரைக்காலில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் கனமழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு ‘ரெட்’ அலர்ட் மற்றும் மிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.