திடீர் கட்டிட விபத்தில் சிக்கிய 3 சிறுவர்கள்! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
மூன்றாவது மாடி பால்கனி இடிந்து விழுந்த போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோடம்பாக்கம் அருகே உள்ள வீட்டு வசதி குடியிருப்பு பகுதி வளாகத்தின் மூன்றாவது மாடியில் 3 இளம் சிறார்களான பவித்ரன், கவிராயன் மற்றும் அவரது நண்பன் ஜீவா உள்ளிட்டோர் பால்கனி அருகே வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டின் மூன்றாவது மாடியின் பால்கனி பகுதி உறுதியிழந்து பலவீனமாக இருந்துள்ளது.
நேற்று மாலை 6 அளவில் சிறுவர்கள் விளையாடிய நேரத்தில் பால்கனி உடைந்து இவர்களின் மீது விழுந்தது. மூன்று பேரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கத்தினர். சத்தம் கேட்டவர்கள் பதறியபடி ஓடி வந்து கட்டிட விபத்தில் சிக்கியிருந்த மூன்று பேரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
இந்த விபத்தில் சிறுவர்களின் தலை,கண் மற்றும் கை,கால் பகுதிகளில் காயம் மற்றும் சிராய்ப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொண்டாலும் இதுபோன்று யாரும் எதிர்பாராத திடீர் சம்பவங்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருவதை தவிர்க்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.