மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சென்னை அணி வீரர்கள்

Photo of author

By Parthipan K

இந்தியாவில் நடக்க இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணிகளை சேர்ந்த இந்திய வீரர்களும் அங்கு சென்று விட்டனர். வெளிநாட்டு வீரர்களும் அமீரகம் வந்து அணியினருடன் இணைந்த வண்ணம் உள்ளனர். அமீரகம் சென்றதும் அனைத்து அணிகளும் தங்களது 6 நாட்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் அதில் 3 முறை (1, 3, 6-வது நாளில்) கொரோனா பரிசோதனையை முடித்து கடந்த வாரத்தில் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டன. ஆனால் சென்னை அணி மட்டும் இன்னும் பயிற்சியை தொடங்க முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேரை தவிர்த்து சென்னை அணியின் கேப்டன் டோனி உள்ளிட்ட வீரர்கள் மற்றும் அணியில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் நேற்று முன்தினம் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. இதனால் சென்னை அணியினர் லேசான நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். அவர்களுக்கு நாளை மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதிலும் ‘நெகட்டிவ்’ (கொரோனா இல்லை) என்று முடிவு வந்ததும் நாளை மறுதினம் (4-ந்தேதி) பயிற்சியை தொடங்கி விடுவோம் என்றும், தொடக்க லீக் ஆட்டத்தில் விளையாட சென்னை அணி தயாராக இருப்பதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நேற்று தெரிவித்தார்.