இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானிலும் சீனா, தனது வழக்கமான வேலையை காட்டியுள்ளது. பூடானில் உள்ள சக்தேங் வனவிலங்கு சரணாலயத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டும் பணியில் பூடான் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, சக்தேங் சரணாலயத்தின் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறி பூடானுக்கு அதிர்ச்சி கொடுத்தது. சீனாவின் இந்த நிலைப்பாட்டை பூடான் மிக கடுமையாக எதிர்த்துள்ளது. பூடானும் சீனாவும் எல்லைப் பிரச்சினையை பரஸ்பரம் தீர்த்துக்கொள்ள 1984- ஆம் ஆண்டு முதல் 24 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
கடைசியாக 2016- ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பூடானில் உள்ள டோக்லாம் சின்சுலாங், டிரமனா மற்றும் ஷக்தோ என மேற்கு செக்டாரில் பரந்து விரிந்துள்ள 269 சதுர கி.மீட்டர் இடங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பூடானிடம் சீனா வலியுறுத்தி வருகிறது. இதற்கு பதிலாக, பசம்லங் மற்றும் ஜகர்லாங் பள்ளத்தாக்குகளுக்கு உரிமை கொண்டாடுவதை நிறுத்திவிடுவோம் என சீனா கூறி வருகிறது. ஆனால், சீனாவின் கோரிக்கையை பூடான் இதுவரை ஏற்கவில்லை.