உலகில் மிக அதிகமாகக் கண்காணிக்கப்படும் 20 நகரங்களில் 18 சீனாவைச் சேர்ந்தவை என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் தொழில்நுட்ப இணையப்பக்கம் Comparitech அந்த ஆய்வை நடத்தியது. ஒரு நகரத்தில் அதிக அளவு கண்காணிப்புக் கேமராக்கள் இருப்பதால் அங்கு குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்வதற்குச் சான்றுகள் இல்லை என்று விளக்கியது. 2017இல் சீனாவின் தேசிய கண்காணிப்புக் கேமரா கட்டமைப்பில் சுமார் 20 மில்லியன் கேமராக்கள் இயங்கி வந்ததாகக் கூறப்பட்டது, இவ்வாண்டு அந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று நம்பப்படுகிறது. பொது இடங்களில் நடக்கும் திருட்டு, வன்முறை போன்ற குற்றங்களை மட்டுமே கேமாராக்கள் அடையாளம் காட்டுவதாகவும், நிதித் துறை,வரி மோசடி சார்ந்த குற்றங்களை அவை அடையாளம் காட்டுவதில்லை என்றும் ஆய்வு சுட்டியது.
சுமார் 1.15 மில்லியன் கண்காணிப்புக் கேமராக்கள் கொண்ட பெய்ச்சிங் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. அங்கு சுமார் 1,000 பேருக்கு 60 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 1 மில்லியன் கேமராக்களைக் கொண்ட ஷாங்ஹாய் இரண்டாம் நிலையில் உள்ளது. பட்டியலில் மூன்றாமிடத்திலுள்ள லண்டனும், 16ஆம் இடத்தில் உள்ள ஹைதராபாத்தும், தரநிலையில் இடம்பெற்றுள்ள சீனாவைச் சேராத இரு நகரங்கள். 2021க்குல் சீனாவில் 567 மில்லியன் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஒப்புநோக்க அமெரிக்காவில் 85 மில்லியன் கேமராக்கள் பொருத்தப்படும். 150 நகரங்கள் அடங்கிய பட்டியலில் சிங்கப்பூர் 33 ஆம் இடத்தைப் பிடித்தது. தீவு முழுவதும் சுமார் 86,000 CCTV கண்காணிப்புக் கேமராக்கள் இருப்பதாய் ஆய்வு குறிப்பிட்டது.