திடீரென அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசியலில் பரபரப்பு!
தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவிவரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தேர்தல் முடிந்து இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் இருப்பதால், தமிழகம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தாலம், அவரால் எந்தவித முடிவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் அதிகாரிகள் மாறிமாறி ஆலோசனை நடத்தி, சடங்குக்காக மட்டுமே தாங்கள் எடுத்துள்ள முடிவுகள் முதலமைச்சரிடம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், அதனைப் பயன்படுத்தி எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்காக, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து நாட்டுக்கு இலவசமாக வழங்கத் தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
அப்போது, மத்திய அரசு அனுமதி வழங்கலாம் என்றும் தெரிவித்தது. ஆனால், தமிழக அரசு தரப்போ, அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. அதற்கு, ஏன் தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடாது? எனக் கேள்வி கேட்டிருந்தது.
அதன்பிறகு, தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ள தமிழக அரசு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால், ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையை எடுத்து நடத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவெற்றி, உச்சநீதிமன்றத்திற்கு பதிலளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.