ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! பார்த்து பன்னுங்க! ஊடகங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த துணை முதலைமைச்சர்!

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! பார்த்து பன்னுங்க! ஊடகங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த துணை முதலைமைச்சர்!

நாட்டில் கொரோனா பரவலை காட்டுத்தீ போன்று பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அதிலும், தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் அடுத்தடுத்து ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாக தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியிடமும் கெஞ்சிவிட்டார். அனைத்து மாநில அரசுகளிடமும் கெஞ்சிவிட்டார். இது போதாதென்று, நேற்று பெரிய தொழிற்சாலைகளிடம் உதவி கேட்டுள்ளார்.

சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ள இந்த நிலையில், அம்மாநில துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா டிவிட்டரில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து டிவீட் செய்துள்ளார். அதில், ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என மருத்துவமனைகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 18 கிலோ லிட்டர் ஆக்சிஜன் கையிருப்பு இருக்கும் போது பற்றாக்குறை இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால், 21 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த மருத்துவமனையில், ஒருநாளைக்கு 4.8 கிலோ லிட்டர் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் அடுத்த மூன்று நாட்களுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

மற்றொரு சிறிய மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் உருளைகள் உள்ள நிலையில், 20 உருளைகள் பயன்படுத்தாமல் இருக்கும் போதே பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்ததாகவும், அதனால், தேவையில்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் மனிஷ் சிசோடியா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இதுபோன்று செய்திகள் வரும்போது அதனை உண்மையா எனக் கண்டறிந்து செய்தி வெளியிடுமாறு ஊடகங்களுக்கும் அவர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.