தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கல்லூரிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை அடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர் மாதத்தில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதன் பின்னர், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் முதுகலைப் படிப்பு அடிக்கும் இறுதியாண்டு மாணவர் களுக்கும் திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதை தொடர்ந்து டிசம்பர் 7ம் தேதி (இன்று) முதல் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.
இந்நிலையில், சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.